Thursday, 11 March 2021

புத்தக விமர்சனம் : பிறகு

PiraguPiragu by Poomani
My rating: 5 of 5 stars

பிறகு. பூமணி அவர்கள பத்தி அசுரன் படம் பாத்து தெரிஞ்சுக்கிட்ட எனக்கு நண்பன் வீட்டுல இந்த புத்தகத்த பாத்ததும் எடுக்காம இருக்க முடியல. இதுதான் என்னோட முதல் பூமணி புத்தகம் (புத்தகமா 😊). சமீப வருடங்கள்ல நான் படிச்ச சிறந்த சமூகம் சார்ந்த புத்தகங்கள்ல ஒன்னா இது அமைஞ்சுது.

இந்தியா விடுதலையடைந்த காலகட்டத்துல தெற்கே இருக்க ஒரு கிராமத்துல நடக்குற கதைதான் இந்த பிறகு புத்தகம். அந்த காலத்துல ஊர்காட்டுலாம் எப்படி இருந்தது, அந்த மக்களோட வாழ்வியல் எப்படி இருந்ததுனு படம் பிடிச்சு காட்டிருக்கு இந்த புத்தகம். 'பிறகு'ல என் கவனத்தை ஈர்த்த சில விசயங்கள் :
  • ஒரு புத்தகம் 'ஏலேய் சக்கிலித்தாயிளி' அப்படினு ஆரம்பிக்கிறப்ப ஆச்சர்யமா இருக்கு. இந்த கத எப்படி இருக்க போகுதுங்கற ஆர்வமும் கூடவே வருது.
  • சாதிய கட்டமைப்ப ரொம்ப நுட்பமா அனுகீருக்காருனு தோணுச்சு. ஒரு புனைவு கதைல இது மாதிரி தகவல்களை கதை தொய்வாகம சொல்றது தனி கலை 😊
  • மாட்டிறைச்சிக்கு எதிரா அம்பேத்கரே பேசிருக்காருனு ரொம்ப நாளை ஒரு உருட்டு இருக்கு. ஆனா அவர் சொன்னதென்னமோ இறந்த மாட்ட சாப்பிடாதீங்கனு. அந்த காலகட்டத்துல இறந்த மாட்ட சாப்பிடற பழக்கம் இருந்தத எடுத்து காட்டீருக்காரு பூமணி.
  • குருவி வேட்டை எப்படி பண்ணுவாங்கனு ஒரு பகுதி இருக்கு. இரண்டு கதாபாத்திரங்களோட உரையாடலா இருக்கு. அந்த வேட்டை முறையே வித்தியாசமா இருந்துது.
  • தவறு செய்யுறது மேல்நிலைல இருந்த சாதிகளுக்கு எவ்வளவு சுலபமா இருந்ததுனு அங்கங்க தொட்டுட்டு போயிருக்காரு.
  • சமூகத்துல பெண்களோட நிலை எப்படி இருந்தது, அது சாதிய பொறுத்து எப்படி மாறுபடுதுனு காட்டிருக்காரு பூமணி. உதாரணமா, மறுமணம், விரும்பியவரோடு பெரிய பிரச்சனை இல்லாம நகர்ந்து போறதுலாம் மேல்நிலை சாதி பெண்களை விட கீழ்நிலை சாதிய பெண்களுக்கு சுலபமா இருந்திருக்கு. ஆனா, அந்த கீழ்நிலை சாதிகளிலும் பெண் ஒரு படி கீழ தான் வைக்கப்பட்டிருக்கா. பாதிக்கப்பட்ட பெண்ண குறை சொல்றது போன்ற பழக்கங்கள் அங்கேயும் இருந்திருக்கு.
  • ஒரு பயணம் போல பல வருடங்களுக்கு கதை போனது நல்லா இருந்தது. காலத்துக்கேற்ப மாற்றங்கள் கொஞ்சம் வர்றதையும் காட்டிருக்கார்.
  • மேல்நிலை சாதிலயும் சிலர் கீழ்நிலை சாதிகளுக்கு கொஞ்சம் ஆதரவா இருந்திருக்காங்க, ஆனா அவுங்களும் முழுசா அந்த சாதிய கட்டமைப்புல இருந்து வெளிய வரலைங்கிற மாதிரியான கதாபாத்திர(ம்)ங்கள் கதைல வடிவமைக்க பட்டிருக்கு.

இந்த கதைல எனக்கு உறுத்தல் என்னனா, என்னால அந்த மக்களோட பேச்சு வழக்க உடனே புரிஞ்சுக்க முடியலைங்கிறதுதான். எனக்கு தென் மாவட்ட வட்டார வழக்கு சுலபமா புரியும்னு ஒரு சுய பிம்பம் இருந்தது. அதன் இந்த புத்தகம் உடைச்சிடுச்சு. படிக்க ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமா இருந்தாலும், போக போக பழகிடுச்சு :-)

பி.கு : சில மக்கள் மொழிவழக்கு வார்த்தைகளுக்கு புத்தகத்தோட பின்பக்கம் ஒரு தமிழ் - தமிழ் அகராதி இருக்கு. கதைய சரியா புரிஞ்சுக்க இது அங்கங்க உதவுச்சு.


View all my reviews